வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காண்போம் வாரீர்!


ஐந்தெழுத்தன்; ஆறுமுகன்; பெருமாள்; போற்றி
     ஆறுகால பூசைவிழா எடுத்த போதும்!
வந்ததுவா வான்மழையும்? பலனும் உண்டோ?
     வாயுலர மந்திரங்கள் "செ"பித்த நல்லோர்;
வெந்துமனம் வீழ்கின்றார்; விளைச்சல் நாட்டில்
     வெலவெலத்துப் போயிற்று; மக்கள் கண்ணீர்
சிந்துகின்றார்; காரணம்என்? பக்தி எல்லாம்
     சுயநலமே! பொதுமையில்லை! உண்மை காணீர்!

வாழ்க்கைத் துணைதேடு கின்ற செயலா;
     வரதட்சணை உயர்ந்துள்ளது; அறிவைத் தேடும்
தாழ்வில்லா கல்வியகம் தன்னில் காசு
     தளர்வின்றி தருவார்க்கே இடமாம்! பின்னர்
வீழ்ந்திடுமா வேலையதும்? கையூட் டின்றி;
     விழிபிதுங்க அனைவருமே வெதும்பிச் சாக
பாழ்பட்டுப் போனதுவே! குமுகா யத்தின்
     பற்பலவும் மாய்ந்தொழிந்தால்; வாழ்க்கை எங்கே?

நாடிங்கே உரிமைதனைப் பெற்று இந்நாள்
     நாலைந்து ஆண்டுடனே ஐந்து பத்தும்
ஓடியதும் மறைந்ததுவே! அரசின் திட்டம்
     ஓர்நாளும் மக்களிடம் சேரக் காணோம்!
பாடிவைத்தார் பாரதியும் தாசன் தானும்
     பயன்உண்டோ? சமுதாயப் பார்வை தன்னில்
கூடியதா ஒருமைமனப் பார்வை? எங்கும்
     குலைந்ததுவே பண்பாடு! பயன்தான் என்ன?  

நமக்குள்ளே பிரிவினைகள் இருந்த தாலே
     நாம்அடிமை அன்றானோம்! காந்தி போன்றோர்
தம்முடைய தியாகத்தால் வாழ்வில் மீண்டும்
     தன்னுணர்வு வரப்பெற்றோம்! சுதந்தி ரத்தால்
“தும்”முவதும் “இரு”முவதும் பொதுமை அன்றோ?
     துடிப்பதுவும் கண்ணியற்கை; என்ப தெல்லாம்
நிம்மதியாய் மறந்ததனால்; மீண்டும் தொல்லை
     நிகழாமல் காத்திடவே; எழுவோம்! வாரீர்!

“வான்சிறப்பு” தந்ததிரு வள்ளு வத்தின்
     வார்த்தையினை இன்றுணர்ந்த நாட்டோர்; இங்கே
வீணாகா நிலைதனிலே நிலத்தில் நீரை
     வேண்டுமட்டும் சேகரிப்போம்! நதிகள் தம்மை
தான்இணைத்தால் இந்தியத்தின் நிலங்கள் யாவும்
     தானியங்கள் பலவிளையும் பூமி ஆகும்!
“கான்”வளரும்; “கவின்”மலரும்; கவலை போகும்
     காதலுடன் இந்தியத்தாய் வளர்வாள்! வாழ்வாள்!

அளப்பரிய இலக்கியங்கள்; ஆன்றோர் வேதம்;
     அத்தனையும் சொல்லியசொல் மறந்து; நாட்டோர்
திளைக்கின்றார் மகிழ்ச்சியினில்; பொதுந லந்தான்
     திசைமாறிப் போனதுவோ? இலஞ்சப் பேய்கள்
விளைக்கின்ற தீமையினால்; நாடே பாழாம்!
     விபத்துதனைத் தடுப்பதுவே அறிவின் மாட்சி!
களைத்துவிட்ட இளைஞர்களே! எழுக! உங்கள்
     கருத்துவளம் பெருகட்டும்! வெல்க நாடு!

எங்கெங்கும் கொலைகொள்ளை; வறுமை; காமம்
     எழுப்புகின்ற அவக்கூச்சல்; பெண்மை காக்க
இங்கெழுந்த சட்டங்கள் எல்லாம்; இந்நாள்
     இருக்கிறதா இந்நாட்டில்? என்னும் கேள்வி
தங்குதடை இல்லாமல் எழுதல் காண்பீர்!
     தவப்பெருமை இளைஞர்களே! கார ணத்தை
சங்கெடுத்து முழங்கிடுவீர்! நமக்குள் நாமே
     சத்தியத்தை மனம்கொள்வோம்! வெல்வோம்! வாழ்வோம்!

இந்தியத்தாய் பெற்றமக்கள் எல்லாம், இங்கே
     இனத்தாலும் மொழியாலும் பிரிந்த போதும்!
சொந்தமுடன் நாம்இணைந்து பேத மின்றி
     சுகம்தன்னைப் பெற்றிடுவோம்! எதிலும் எங்கும்
எந்திரமாய் ஒருமையுடன் நாம்உ ழைப்போம்!
     எல்லாமும் எப்படியும் பெறுவோம்! நம்மின்
சிந்தனையை உயர்த்திடுவோம்! வலிமை பெற்ற
     சிறப்பான பாரதத்தை காண்போம்! வாரீர்!

{புலவர். இளமுருகு அண்ணாமலை}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக