புதன், பிப்ரவரி 22, 2017

அதிகாரம் 057: வெருவந்த செய்யாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை

0561.  தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
           ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

           விழியப்பன் விளக்கம்: நடுநிலையோடு இருந்து, குற்றங்களை ஆராய்ந்து; அதுபோன்ற 
           குற்றங்கள் மீண்டும் நிகழாத வண்ணம், குற்றங்களுக்கு நிகராகத் தண்டிப்பவரே 
           அரசாள்பவர்.
(அது போல்...)
           தாய்மையோடு அணுகி, பிழைகளைக் கண்டறிந்து; அதுபோன்ற பிழைகள் மீண்டும் நேராத 
           வகையில், பிழைகளைக் களைய உதவுவோரே ஆசிரியர்.
      
0562.  கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
           நீங்காமை வேண்டு பவர்

           விழியப்பன் விளக்கம்: நெடுங்காலம் ஆட்சியை தொடர விரும்புவோர்; கடுமையாய் 
           குற்றங்களைக் கண்டித்து, மிதமாய் தண்டனையை அளிக்கவேண்டும்!
(அது போல்...)
           வெகுகாலம் உறவுகளை நீட்டிக்க வேண்டுவோர்; அவசரமாய் குறைகளை  விவாதித்து, 
           மெதுவாய் பகையை வளர்க்கவேண்டும்!
           
0563.  வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
           ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: பொதுமக்களை மிரட்டிச் செயல்களைச் செய்யும், 
           கொடுங்கோலராய் ஆட்சியாளர் இருப்பின்; அவரின் ஆட்சி உறுதியாய் விரைவில் 
           கெட்டழியும்.
(அது போல்...)
           மாணாக்கர்களை வதைத்துத் தண்டனைகளை அளிக்கும், கொடுமனத்தராய் ஆசிரியர் 
           இருப்பின், அவரின் வேலை நிச்சயமாய் உடனே பறிபோகும்.

0564.  இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
           உறைகடுகி ஒல்லைக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: "எம்மை ஆள்பவர் கொடியர்" என்ற அவச்சொல்லால், 
           விமர்சிக்கப்படும் அரசாள்பவரின் ஆட்சி; ஆட்சிக்காலம் இழந்து, விரைவில் கெட்டழியும்.
(அது போல்...)
           “எம்மை வழிநடத்துவோர் தீயவர்” என்ற பழிச்சொல்லால், குற்றச்சாட்டப்படும் முதியோரின் 
           வாழ்வு; ஆயுட்காலம் இழந்து, வேகமாய் முடியும்.

0565.  அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
           பேஎய்கண் டன்னது உடைத்து

           விழியப்பன் விளக்கம்: எளிதில் அணுக முடியாதவராயும், இனிமையற்ற முகத்துடனும் 
           இருப்போரின் அளவுகடந்த செல்வம்; பூதத்தால் அடையப்பெற்றது போன்றதாகும்.
(அது போல்...)
           உறவில் பிணைப்பு இல்லாதவராயும், மனிதமற்ற இயல்புடனும் இருப்போரின் எல்லையற்ற 
           அன்பு; பெருங்கடலில் புதைந்திருப்பது போன்றாதாகும்.

0566.  கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்
           நீடின்றி ஆங்கே கெடும்

           விழியப்பன் விளக்கம்: கொடிய சொற்களைப் பேசி, கருணை இல்லாதவராய் அரசாள்பவர் 
           இருப்பின்; மக்களின் மலையளவு செல்வம், வளர்ச்சி இல்லாமல் விரைவாய் அழியும்.
(அது போல்...)
           தீய செயல்களைப் பழகி, ஒழுக்கம் இல்லாதவராய் பெற்றோர் இருப்பின்; இளைஞர்களின் 
           கடலளவு சக்தி, பயன் இல்லாமல் வேகமாய் கெடும்.

0567.  கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
           அடுமுரண் தேய்க்கும் அரம்

           விழியப்பன் விளக்கம்: அன்பற்ற சொற்களும், அளவுகடந்த தண்டனைகளும்; 
           அரசாள்பவரின் வெற்றியை உடைத்துத் தகர்க்கும், அறுக்கும் கருவிகளாகும்.
(அது போல்...)
           அறமற்ற சிந்தனைகளும், இரக்கமற்ற செயல்களும்; மனிதகுலத்தின் அடிப்படையை 
           சிதைத்து அழிக்கும், கொடிய விஷங்களாகும்.

0568.  இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
           சீறின் சிறுகும் திரு

           விழியப்பன் விளக்கம்: அரசாங்க அங்கத்தினரான அமைச்சர்களைப் பின்பற்றாமல், 
           சினத்தைப் பின்பற்றி அரசாள்பவர் வெகுண்டெழுந்தால்; அரசாங்கத்தின் செல்வம் அழியும்.
(அது போல்...)
           தலைமுறையின் நரம்புகளான உறவினர்களைப் பேணாமல், வெறுப்பைப் பேணிக் 
           குடும்பத்தினர் பகைகொண்டால்; தலைமுறையின் வளர்ச்சி குறையும்.

0569.  செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
           வெருவந்து வெய்து கெடும்

           விழியப்பன் விளக்கம்: போர் போன்ற நெருக்கடியான சூழலுக்கு, முன்பே பாதுகாப்பு 
           செய்யாத அரசாள்பவரின் ஆட்சி; பயம் அடைந்து, விரைவில் அழியும்.
(அது போல்...)
           வேலையிழப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு, முன்னரே ஏற்பாடு செய்யாத 
           தலைமையின் குடும்பம்; வறுமை கொண்டு, வேகமாய் தடம்புரளும்.

0570.  கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
           இல்லை நிலக்குப் பொறை

           விழியப்பன் விளக்கம்: அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் அரசாட்சி, அறநெறிப் 
           பயிலாதோரை துணை சேர்க்கும். அதைவிட, ஒரு நாட்டிற்கு பெருஞ்சுமை 
           வேறேதுமில்லை!
(அது போல்...)
           சூறையாடும் வழியில் நடக்கும் வணிகம், இரக்கம் அறியாதோரை தரகர்களாய் நியமிக்கும். 
           அதைவிட, ஒரு சமுதாயத்திற்கு பெருங்குறை வேறேதுமில்லை!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக