புதன், பிப்ரவரி 08, 2017

இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியும் - மூத்த தலைமுறையினரின் பின்புலமும்!!!

{"தமிழ் ஹிந்து" நாளிதழுக்கு அனுப்பப்பட்டு, எந்த பதிலும் இல்லாததால் - இங்கே பதிகிறேன்.
முதல் வடிவத்தைப் படித்து, சில மாற்றங்களை பரிந்துரைத்த; 
என் நண்பன் திரு. அ. கதிர்வேலுக்கு நன்றிகள்}
*****

    தன்னெழுச்சியாய் கருவாகி, உருவாகி, நாளைய விடியலுக்கு எருவாகி முடிந்த; இளைய தலைமுறையினரை முதன்மைப்படுத்திய போராட்டம் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. முன்வைத்த பிரச்னை “ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு” எனினும்; தவறாமல் மற்ற சமூகப் பிரச்சனைகளை இணைத்து, வலுவான அடித்தளத்தை அமைத்தனர் இளைய தலைமுறையினர். பெரும்பான்மையில் எல்லோரும் இந்த வெற்றியை உணர்ந்து, உள்வாங்கி சிலாகித்துப் போற்றுகின்றனர். இருப்பினும், சிலர் "இந்த போராட்டம் இப்படி முடிந்திருக்கலாம்! அப்படி முடிந்திருக்கலாம்!" என்ற ஆலோசனையைக் வழங்கும் போது; ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் பெருந்தகை சொல்லிய “சொல்லுதல் யார்க்கும் எளிய!” நினைவுக்கு வருகிறது. ஆனால், பெருந்தகை தொடர்ந்த  “அரியவாம்! சொல்லிய வண்ணம் செயல்!” என்பதை மெய்ப்பித்து - அரிதான செயலை செய்திருக்கிறார்கள் இளைய தலைமுறையினர்.

         இந்த போராட்டம் எவ்வொரு கட்சியையும்/இனத்தையும்/தலைவரையும் முதன்மைப் படுத்தாத தன்னெழுச்சி போராட்டம்! இதை ஒருங்கிணைத்தவர் என ஒரு தனிமனிதரோ அல்லது தனி குழுவோ இல்லை! இத்தன்னெழுச்சி - ஓர் சாகசம்! துவங்கிய கணமே, பல ஆயிரக் கணக்கானோரைக் கொண்டெழுந்தது - ஓர் சகாப்தம்! சில மணிகளில், பல இலட்சங்களாய் பெருகியது - ஓர் வரலாறு! மேலோட்ட பார்வைக்கு, இது வெறும் "ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டை” மையப்படுத்தி; உணர்ச்சிவயப்பட்டு உருவான போராட்டமாய் தோன்றும்! ஆனால், ஒவ்வொரு இளைய தலைமுறையினரின் ஆழ்மனதிலும் "பல சமுதாய பிரச்சனைகள்" இரணங்களாய் இருந்திருப்பதை இத்தன்னெழுச்சி பறைசாற்றுகிறது! ஒவ்வொரு சாமான்யனும், பிரச்சனைகளைக் கடந்து செல்வது இயல்பாகிய போதும்; தன் அடையாளம்/சுயத்தை எவரேனும் அழிக்கவோ/உடைக்கவோ முற்படும்போது எதிர்ப்பைக் காட்டத் தவறுவதே இல்லை.

      அதுவே, ஓரினத்தின் அடையாளத்தையே அழிக்கவோ/உடைக்கவோ சூழ்ச்சிகள் நடந்தால்; எதிர்ப்பு எப்படி இருக்கும்...? அதைத்தான், இளைய தலைமுறையினர் ஒன்றுகூடி அரங்கேற்றி; உலகுக்கு காணொளி மூலம் காட்டி இருக்கிறார்கள். பொறுமையின் விளிம்பு வரை துரத்தப்படும் ஒருவரின் எதிர்ப்பு இப்படித்தான் இருக்கும் - இதுவே மானுட இயல்பு! இதற்கு இளைஞர்/முதியவர்/தமிழர்/இந்தியர் என்ற எந்த பாகுபாடும் இல்லை! இலையை தலைமுறையினரின் போராட்டம் திசை மாறியது அல்லது நீர்த்துப் போனது என்பதெல்லாம் “வெற்றுப் பிதற்றல்கள்!”.  எல்லாப் பிரச்சனைகளையும் தாண்டி, ஒவ்வொரு இளைய தலைமுறையினரின் ஆழ்மனதிலும்; அவர்களின் முந்தைய தலைமுறையினரின் வாழ்வியல், எண்ண வடிவில் இருந்திருப்பது திண்ணம்! நம் “தாத்தா மற்றும் பாட்டி” காலத்தில், இப்படிப்பட்ட தன்னெழுச்சி தேவைப்பட்டதில்லை. அவர்களுக்கு இருந்ததெல்லாம் - ஒற்றை எதிரி! அது ஆங்கிலேயர்கள் எனும் நம் அந்நியர்கள்.

         அவர்களுக்கு தேவைப்பட்டது அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை மட்டுமே! காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வ.உ.சி., பாரதியார் போன்ற எண்ணற்ற உண்மையான தேசப்பற்று கொண்ட தலைவர்கள், தலைமையெனும் அதிகார போதை தரும் மாயையிலிருந்து விலகி; மக்களில் ஒருவராய் சேர்ந்து போராடினர். அவர்கள் எந்தப் பிரிவினையுமின்றி ஒன்று சேர்ந்து, அடிமைச் சங்கிலியை உடைத்தெரிந்தனர். அடுத்து வந்த நம் “அப்பா மற்றும் அம்மா” காலத்தில் - அவர்களின் முன்னோர் பெற்று தந்த சுதந்திரமும்/உரிமையும் கொஞ்சம், கொஞ்சமாய் பறிபோக ஆரம்பித்தது. அது, மீண்டுமொரு அடிமைசங்கிலி அரசியல்வாதிகள் எனும் உள்ளூர் எதிரிகளால் பிணையப்பட வழிவகுத்தது! இதை நம் “அப்பா மற்றும் அம்மா” உணராமல் இல்லை! ஆனால், பொருளாதாரம் எனும் கோரப்பிடியில் சிக்கி, வாழ்வியலே போராட்டமானது அவர்களுக்கு. அதனால் தான், நம் “தாத்தா மற்றும் பாட்டி" உண்மையான தலைவர்களுடன் கைகோர்த்து...

     அந்நியர்களை விரட்டியதை நேரடியாய் பார்த்து வளர்ந்தும்; அவர்கள் உள்ளூர் எதிரிகளை எதிர்க்காமல் கடந்தனர். ஆனால், நம்முள் அறத்தை விதைத்து நம்மையே விதைகளாக்கிட; அவர்கள் தவறவில்லை. அதுதான், இளைய தலைமுறையினர் வடிவில் விருட்சமாகி; "அறப் போராட்டமாய்" உருமாறியது. இதில், என்னைப் போன்றோரை; இடைப்பட்ட தலைமுறையாய் பார்க்கிறேன். எம் பெற்றோரால் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருப்பினும், முழுப் பொருளாதாரத் திடத்தன்மைக்காக வாழ்வியலோடு போராடும் எங்களுக்கும்; முந்தைய தலைமுறையினரின் இயலாமை, நீட்சியாய் இருக்கிறது. ஆனால், எங்களின் சகோதரர்/சகோதரி போன்ற உறவில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு; அறம் சார்ந்த புரிதல்களையும், முடிந்த அளவில் பொருளாதார ஆதரவையும் கொடுக்க நாங்கள் தவறவில்லை. இப்போராட்டம், இளைய தலைமுறையினர் உணர்ச்சிவயப்பட்டு; இலக்கில்லாமல் நடத்தியதல்ல!

   சூழலால் இயலாமையில் உழன்ற, மூத்த தலைமுறையினரும் துணை நிற்பர் என்பதை மிகச்சரியாய் கணித்து; தேர்ந்த முதிர்ச்சியுடன், தெளிவான இலக்கோடு நடத்தியப் போராட்டம்! "வயது முதிர்ந்தவர் முதல் இளம்பிள்ளைகள் வரை போராட்டக்களத்தில்; முகமலர்ச்சியோடு கலந்து கொண்டது" அதைத்தான் பறைசாற்றுகிறது! எனவே, இளைஞர்களால் உருவான இப்போராட்டம் நமக்கு சம்பந்தமில்லாத ஒன்று என்பதாய் கருதாமல்/விமர்சிக்காமல்; மூத்த தலைமுறையினராய், நம் ஒவ்வொருவருக்கும் இந்த போராட்டத்தில் தொடர்பும்/பொறுப்பும் இருக்கிறது என்பதை உணர்வோம். அது நம் சமுதாயக் கடமையும் கூட என்பதை மனத்திருத்தி, அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர்களுக்கு உறுதுணையாய் நிற்கும் மனவுறுதியை ஏற்போம்! நம் அனுபவமும்; இளைய தலைமுறையினரின் அகன்ற அறிவும்/வெளியுலகத் தொடர்பும்  ஒன்றிணையட்டும்! எவர் எப்படி விமர்சித்தாலும்; என்னளவில், நடந்து முடிந்த…

போராட்டத்தை - வெற்றிப்படிகளின் "ஆரம்ப"ப்படியாய் தான் பார்க்கிறேன்!

!!

பின்குறிப்பு: சிலர் வாதிப்பது போல் - இளைய தலைமுறையினரை ஒருங்கிணைக்கும் “ஓர் தலைமை” இல்லாத கவலை எனக்குள்ளும் உண்டு! நம் பெருந்தகை "அரசியல்" எனும் இயலில், அரசாங்கம் மற்றும் அரசாள்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை, பல்வேறு கோணங்களில் தெளிவாய் விவரித்திருக்கிறார். அவற்றை உள்வாங்கி, தலைமையைப் பற்றிய ஓர் விவாதமும் என்னுள் நடந்து கொண்டிருக்கிறது. அதை, அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக