சனி, பிப்ரவரி 11, 2017

அன்புள்ள திரு. கமல் ஹாசனுக்கு!

வருவீர்! வெல்வீர்!!

{உங்கள் அனைவரின் சார்பாகவும் எழுதியிருக்கிறேன்! 
அருள்கூர்ந்து, பலருடனும் பகிருங்கள்; இது, திரு. கமல் ஹாசனை சேரட்டும்!!}

*******
        அன்புள்ள திரு. கமல் ஹாசன்,

      ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஜனநாயத்தின் ஒரு அங்கத்தினனாய்  நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மிகுந்த பாராட்டுக்குரியவை; வாழ்த்துகிறேன்! உங்களைப் பல ஆண்டுகளாய் தொடர்வோர்க்கு; உங்களின் இந்த ஜனநாயகக் கடமையும், உணர்வும் புதிதான செய்தியல்ல! உங்களின் படங்கள் துவங்கி, உங்களின் பேட்டி, கவிதை, கருத்துகள் வரை பலவற்றைத் தொகுத்து ஒரு நீண்ட பட்டியலை இடலாம்! நான் உங்களின் அபிமானிகளில் ஒருவன்! ஸ்ருதியை "என் மகளாய்" பார்க்கும் மனநிலையைக் கூட ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதுதான், உங்கள் மீதான என் போன்றோரின் பார்வை/நம்பிக்கை. சரி, இந்தப் பகிரங்க கடிதத்தின் கருவுக்கு வருகிறேன்.
 • சமீபத்திய பேட்டி ஒன்றில், நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? என்ற கேள்விக்கு "1. எனக்கு தெரிந்த விடயத்தை மட்டுமே! நடிப்பது எனக்குத் தெரிந்த தொழில், அதனால் செயகிறேன்; அரசியல் எனக்குத் தெரியாது. 2. எனக்கு நன்றாக சாப்பிடத் தெரியும் என்பதற்காக, என்னையே சமைக்க சொன்னால் எப்படி?" - என்ற சாராம்சத்தில் இரண்டு பதில்களைச் சொன்னீர். பலரும் உங்களின் பதிலளிக்கும் திறனைக் கண்டு வியந்தனர்! நானும் வியந்தேன் என்பதை மறுக்கவில்லை! ஆனால், அதோடு மட்டும் நின்றுவிட - நான் உங்கள் இரசிகன்(மட்டும்) அல்ல! நான் உங்கள் அபிமானி! இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்.
 • மேலுள்ள உங்கள் விளக்கங்களை, நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் ஒரு விடயத்தின் அடிப்படையில்; கேள்வியாய் வைக்க விரும்புகிறேன். அந்த விடயம் "நான் நடிகனாக வரவிரும்பி திரையுலகுக்கு வரவில்லை! ஆனால், நடிகனாய் ஆக்கப்பட்டேன்!" என்பதே. இதுபோல், பலரும் ஆகி இருக்கலாம்! ஆனால் "உலக நாயகன்" ஆகிட எல்லோராலும் இயலாது. எனவே, தெரியாத ஒரு விடயத்தில் புகுந்து, அதைத் திறம்பட செய்வது உங்களுக்கு புதிதல்ல! நடிகன் எனும் அங்கத்தையும் தாண்டியம், பலவற்றை செய்து சாதித்து காட்டி இருக்கிறீர்.
 • என் அனுமானம் சரியெனில் "நீங்கள் நன்றாக சமைக்கத் தெரிந்தவராகவும் இருப்பீர்!" இது பொய்யெனினும், பரவாயில்லை "தமிழக மக்களுக்காய், சமைக்கப் பழகுங்கள்!" ஆம், நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என் கோரிக்கை. ஏன் வரக்கூடாது? என்று பிறர் கேட்டதுக்கு, நீங்கள் சொன்ன பதில்கள் சாதுர்யமானவை தான்! ஆனால், சரியானவையா? என்ற வினா எழுகிறது! பிறக்கும் போதே, எவரும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை என்பதை இச்சிறியேன் உங்களுக்கு சொல்வது அபத்தம் எனத் தெரிந்தும் - இச்சூழலில் சொல்வது, என் கடமையாகிறது.
 • அடுத்த தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கின்றது. அதற்குள், உண்மையாகவே உங்களுக்கு தெரியாதவை இருப்பினும் தெரிந்து கொள்ளலாம். முதலில் களத்தில் இறங்குங்கள்! அரசியல் களம், உங்களுக்கு தரும் சவால்கள்; உங்கள் அரசியல்-அறிவை "மென்மேலும்" வளர்க்கும். இன்றைய நிலையில், அரசியலில் உரிய மாற்றம் நிகழ, அரசியல் வரலாறு தெரிந்தவரை விட; "அன்பே சிவம்" என்பதை உணர்ந்த ஒருவரே தேவை! அரசியல் வரலாறை/அறிவை; படிப்பதால் தெரிந்து கொள்ளலாம்! ஆனால், மக்களை நேசிக்கும் ஒழுக்கத்தை - படித்து அறிதலாகாது! அது சிந்தித்து உணர வேண்டியது! படிப்பதை விட, சிந்திப்பது எத்தனை சிரமமானது அனைவரும் அறிந்ததே. எனவே, அரசியலைப் படித்து அறிய வேண்டுமெனில்; அது உங்களுக்கு சாத்தியமானதே!
 • ஒரு நடிகரை அரசியலுக்கு அழைப்பது அல்லது அரசியலில் ஆதரிப்பது; புரியாதோர்க்கு வேண்டுமானால் "சினிமா மோகம்" காரணமாய் நிகழ்வது என்ற பொதுப் புத்தியாய் இருக்கலாம்! ஆனால், அதில் ஒரு உளவியல் உள்ளது. ஆம்! ஒவ்வொரு பெற்றோரும், பார்ப்பவர் அனைவரிடமும் "தெரிந்த பெண்ணோ/பையனோ இருந்தால் சொல்லுங்கள்" என்று வேண்டுவதைப் போன்று, இதுவோர் நம்பிக்கை. அப்படியோர் நம்பிக்கையை நம்பி, தம் பிள்ளைகளின் வாழ்க்கையையே ஒப்படைக்கும் மக்கள்; அரசியலையும்/அரசையும் ஒப்படைப்பதில் ஆச்சர்யம் தேவையில்லை! இந்த நம்பிக்கைகளில், ஏமாற்றங்கள் நிகழலாம்! ஆனால், அந்த நம்பிக்கை சத்தியம்! அது போன்றவொரு நம்பிக்கை தான், ஒரு நடிகரை அரசியலில் எதிர்பார்ப்பதில் உள்ள உளவியல்.
 • உங்களைப் போன்றோரரை அழைப்பதின் பின்னணியில் - வெறும் நம்பிக்கை மட்டுமல்ல! ஆழ்ந்த புரிதலும் சேர்ந்தே உள்ளது! அது நிச்சயம் வெற்றியை/பலனை அளிக்கும். ஒருவேளை "தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது?" என்ற ஐயம் இருப்பின் - அதை தகர்த்து எறியுங்கள். உங்களின் பல படங்கள் அளிக்காத ஏமாற்றத்தை/தோல்வியை விட - உங்களுக்குப் பெருத்த பாதிப்பை வேறெதுவும் அளிக்க முடியாது. உதாரணத்திற்கு - "மகாநதி" திரைப்படம் "வணிக ரீதியாய்" பெரிய அளவில் பலனளிக்காதது - என்னுள் இன்றும் பசுமரத்தாணியாய் இருக்கிறது! "அன்பே சிவம்" கூட காலம் கடந்தே - பல பாராட்டுகளைப் பெற்றது. எனவே, அப்படி ஏதும் நிகழும் என்ற அச்சம் ஏதும் இருப்பின், தூக்கி எறியுங்கள்.
 • இப்போதிருக்கும் நிலையில் "உம்மைப் போல் ஒருவர்" அரசியலில் தோற்க சாத்தியமே இல்லை! உங்களுடன் "என்னைப் போல் பலர்" பொதுவாழ்வில் சாதிக்கும் எண்ணத்தோடு இணைந்திடக் காத்திருக்கிறோம்! எங்களுக்கு மற்றவரின் நம்பிக்கையைப் பெறும் "நம்பிக்கை அளிக்கும்" காரணி இல்லை! என்னுடைய படைப்புகள் பலவும், மிகச் சிறப்பாய் இருப்பினும்; ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிறது! காரணம், நான் பிரபலமில்லை! ஒருவரின் படைப்புகள் பலரையும் சென்று சேர்ந்திட; அது அவசியம்! என் மிகச் சிறந்த நட்பு வட்டம் கூட; என் படைப்புகளை, பொது நட்பைத் தாண்டி இட்டுச் செல்வதில்லை! இதுதான் நிதர்சனம்!
 • அரசியலில் வெற்றி பெற, முக்கியத் தேவைகளில்; கீழ்வருவதும் சில: 1. பலருக்கும் பரிச்சயமான பிரபலம், 2. அந்த பிரபலம் கொடுக்கும் நம்பிக்கை, 3. பொதுவாழ்வை நேசிக்கும் பொதுவுடைமை, 4. நல்ல சிந்தனைகள், 5. நேர்மை/வாய்மை, 6. அரசியல் அறிவு. இவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறது. மேலும், "உண்மையான பிரதிநிதிகளாய்" பிறரிடம் உங்களை இட்டுச்செல்லும் முனைப்புடைய படையும் முக்கியம்! அதற்கு, என்னைப் போன்ற எண்ணற்றோர் இருக்கிறோம். பின் என்ன தயக்கம்? பின் எது தடை?
 • நல்ல சிந்தனைகள், நல்ல செயல்களுக்கு வித்திடும்! உங்களிடம் உள்ள சிந்தனைகள், உங்களின் நற்செயல்களை அடிப்படையாய் உள்ளன! அந்த செயல்கள், நீங்கள் விரும்பும் ஜனநாயக மாற்றத்துக்கு வழி வகுக்க; உங்களின் செயல்பாடுகளைப் பொதுவாழ்வில் இணைப்பது மிக முக்கியம்! அதை நீங்கள் நிச்சயம் செய்யவேண்டும்; அதுதான் என் போன்றோரின் கோரிக்கை!
 • நானறிந்த வகையில், இன்றைய சூழலில்; இங்கே 3 வகையானோர் உண்டு: 1. என்னைப்போல், பொதுவாழ்வில் சாதிக்கும் முனைப்பிருந்தும், பின்தொடர்வோர் இல்லாமல் தோற்போர் - துரதிஷ்ட்டவாதிகள்!, 2. பின்தொடர்வோர் கொண்டு, அரசியலில் நுழைந்து; "சுயநலத்தை மட்டும்" காத்து தோற்போர் - துரோகிகள்!, 3. பின்தொடர்வோர் இருந்தும், அரசியலில் நுழையாமலேயே தோற்போர் - உங்களைப் போன்றோரை என்னவென்பது?! எனக்குத் தெரியவில்லை!
 • நீங்கள் சொல்வது போல், மக்களில் பெரும்பான்மையானோர்; இப்போதைய சூழலுக்கு, நீங்கள் பரிந்துரைத்த அரசியல்வாதிக்கே ஆதரவு அளிக்கிறார்கள்! நானும் அவ்வாறே! ஆனால், அது நிரந்தரமா? என்ற சந்தேகம் "எல்லோருக்கும்" இருப்பது, நீங்களும் அறிந்ததே! எனவே, பல்லாயிரக் கணக்கானோர் சார்பாய், நிரந்தரமான மாற்றத்தை வேண்டி; நான் இந்த அழைப்பை விடுக்கிறேன்! அருள்கூறுத்து உணர்வீர்! நல்ல முடிவெடுப்பீர்!  
சூழலின் அவசியம் உணர்ந்து,
படிப்போர் அனைவரும் இதைப் பகிர்ந்து; 
உங்கள் பார்வைக்கு சேர்ப்பர் என்ற நம்பிக்கையில்...

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
{www.vizhiyappan.blogspot.com}

3 கருத்துகள்: