வெள்ளி, பிப்ரவரி 24, 2017

"டூ-வீலர்" கனவு மகிழ்வு தந்ததா?


     02.03.2014 அன்று "டூ-வீலர்" கனவு... என்றோர் மனதங்கத்தில், கிட்டத்திட்ட 20 ஆண்டு நிறைவேறாக் கனவான; ஒரு "டூ-வீலர்' வாங்கமுடியாத என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தேன். அன்றிலிருந்து சரியாய் 32 மாதங்கள் கழித்து; 02.11.2016 அன்று அந்த கனவு நிறைவேறியது (பார்க்க: மேலுள்ள படம்). மேற்குறிப்பிட்ட பதிவில் சொன்னது போல், இதுவரை; வண்டியை நிறுத்த ஓர் நிரந்தர இடமின்றி இருந்தது. அதனால் தான், இந்த வண்டிக்கான முன்பணத்தைக் கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் - வாங்காமல் தவிர்த்து வந்தேன். இப்பொது, ஓர் நிரந்தர இடம் கிடைத்துவிட்டதால்; மறுசிந்தனை ஏதுமின்றி உடனே வாங்கிவிட்டேன். என்னுடைய கனவு நிறைவேறியது உண்மை தான்! ஆனால், மகிழ்வை தந்ததா என்றால்?... இல்லையென்றே தோன்றுகிறது! "டூ-வீலர்" வாங்கத் துடித்த, அந்த வயதைத் தாண்டியதால் - மகிழ்வு இல்லையா? அல்லது இந்தியாவிலேயே இருந்து, விரும்பிய வண்ணம்...

     அதிக நேரம்/தூரம் ஓட்டமுடியவில்லை என்பதால் - மகிழ்வு இல்லையா? தெரியவில்லை! ஆனால், பெருத்த மகிழ்வு ஏதுமில்லை! அந்த நிகழ்வை இப்படியோர் பதிவாய் எழுத கூட, 3 மாதங்களுக்கு யோசித்து; இன்றுதான் எழுதி இருக்கிறேன். உடனே எழுதும் அளவில் மகிழ்ச்சி இருக்கவில்லை என்பதாய் தோன்றுகிறது. காரணம் புரியவில்லை; ஆனால், மகிழ்வு இல்லை! நான் அங்கிருந்த 15 நாட்களில், கிட்டத்திட்ட 580 கி.மீ. தூரம் ஓட்டினேன்! முதல் "இலவச பராமரிப்பு வேலைக்கு" வண்டியை விடவேண்டும் என்பதால்; அதற்கான இலக்கு தூரத்தை ஓட்டுவதற்காய் - புதுவையில் இருந்து ஒரு முறை "வெண்ணாங்கப் பட்டினம்" வரை சென்றேன்; பின் திண்டிவனம் வரை சென்று வந்தேன்! இருப்பினும் ஏனோ... அந்த மகிழ்வோ/திருப்தியோ எழவில்லை. நான் அங்கிருந்து வந்த பின்; 2 மாதங்கள் வரை, என் மருதந்தை ஓட்டிக்கொண்டு இருந்தார். இப்போது, 3 வாரங்களுக்கு மேல் வண்டி சும்மாதான் நின்று கொண்டிருக்கிறது.

         மூப்பு காரணமாய், என்னப்பனால் அந்த வண்டியை ஓட்ட முடியாது! எனவே, வெறுமனே நின்று கொண்டிருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கும் மேல், நின்ற இடத்திலிருந்து நகராமல் இருக்கிறது! "முழு பணத்தையும் ஒரே தவணையில் செலுத்தி; வாங்கியது தவறோ?" என்றுகூட சில நேரங்களில் யோசனை எழும். ஆனால், கடன் வாங்கி ஒரு பொருள் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை! இருப்பினும், ஒரு பெரும் மதிப்புடைய பொருளொன்றை; கடனில் தான் வாங்கி இருக்கிறேன்! கடன் முடிந்த பின்னர்தான், அப்பொருளால் உண்மையான மகிழ்வு என்னுள் எழும்! அன்றுதான், அதைச் சார்ந்த பதிவையும் எழுதவேண்டும் என்று இருக்கிறேன். ஆனால், அப்படி கடன் ஏதுமின்றி வாங்கியும்; கிட்டத்திட்ட 20 ஆண்டு கால கனவு நிறைவேறியும், மகிழ்ச்சி மட்டும் இல்லை! ஒருவேளை இந்தியாவில் நிரந்தரமாய் தங்கும்போது; மகிழ்வு கிடைக்கக்கூடும்! இப்போதைக்கு, அதை வாங்கியதால் எந்த சலனமும் இல்லாத; என் மனதைப் போலவே...

"Classic 350" மாடலான, அந்த புல்லட்டும் "எந்த சலனமுமின்றி" நின்று கொண்டிருக்கிறது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக