சனி, ஆகஸ்ட் 06, 2016

அதிகாரம் 037: அவா அறுத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்

0361.  அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
           தவாஅப் பிறப்பீனும் வித்து

           விழியப்பன் விளக்கம்: ஆசை என்பது, எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்திலும்; 
           தவறாமல், அவர்களின் ஆசைக்குரிய பிறப்பை அளிக்கும் விதையாகும்.
(அது போல்...)
           கடவுள் என்பது, எல்லா மனிதர்களுக்கும் எல்லா யுகங்களிலும்; மறுக்காமல், அவர்களின்
           அறத்திற்குரிய பயத்தை விதைக்கும் காரணியாகும்.

0362.  வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
           வேண்டாமை வேண்ட வரும்

           விழியப்பன் விளக்கம்: ஆசைப் படும்போது, பிறப்பறுக்க ஆசைப்பட வேண்டும்; 
           ஆசையில்லாமல் இருக்க ஆசைப் படும்போது, பிறப்பறுத்தல் சாத்தியமாகும்.
(அது போல்...)
           இனவெறியை அழிக்க, மொழிவெறியை அழித்திட வேண்டும்; வெறியில்லாமல் இருக்க 
           வெறி கொள்ளும்போது, இனவெறி அழியக்கூடும்.
           
0363.  வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
           ஆண்டும் அஃதொப்பது இல்

           விழியப்பன் விளக்கம்: ஆசையற்ற நிலைப்பாட்டைப் போன்ற உன்னத செல்வம்
           இவ்வுலகில் இல்லைஅதற்கு இணையான ஒன்றுஅவ்வுலகிலும் இல்லை.
(அது போல்...)
           பரஸ்பர புரிதலைப் போன்ற மகத்தான வலிமையாக்கி, இல்லறவுறவில் இல்லை; அதற்கு 
           நிகரான ஒன்று, எவ்வுறவிலும் இல்லை.

0364.  தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
           வாஅய்மை வேண்ட வரும்

           விழியப்பன் விளக்கம்: மனத்தூய்மை என்பது, ஆசையற்ற தன்மையாகும்; அந்த தன்மை, 
           வாய்மையை உணரும் ஆசையால் விளையும்.
(அது போல்...)
           மனிதம் என்பது, மிருக-குணமற்ற நிலைப்பாடாகும்; அந்த நிலைப்பாடு, உயிர்களை 
           நேசிக்கும் குணத்ததால் சாத்தியமாகும்.

0365.  அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
           அற்றாக அற்றது இலர்

           விழியப்பன் விளக்கம்: துறந்தவர் என்போர், ஆசையைத் துறந்தவர் ஆவர்; மற்றவர்கள், 
           முழுமையாக துறந்த துறந்தவர்கள் ஆகமாட்டார்கள்.
(அது போல்...)
           மனிதர்கள் என்போர், மிருக-குணத்தை நீக்கியோர் ஆவர்; பிறர், பரிணாம
           வளர்ச்சியடைந்த மனிதர்கள் ஆகமாட்டார்கள்.

0366.  அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
           வஞ்சிப்ப தோரும் அவா

           விழியப்பன் விளக்கம்: ஆசையே, ஒருவரை வஞ்சித்து அழிக்கிறது! எனவே, அந்த 
           ஆசைக்கு பயந்து வாழ்வதே அறமாகும்.
(அது போல்...)
           சமமின்மையே, பெண்டிரைக் கொடுமைப்படுத்தி ஒடுக்குகிறது! ஆதலால், அந்த 
           சமமின்மைக்கு எதிராய் செயல்படுவதே நியதியாகும்.

0367.  அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
           தான்வேண்டு மாற்றான் வரும்

           விழியப்பன் விளக்கம்: ஆசை சார்ந்த வினைகளை, முழுவதும் அறுத்துவிட்டால்; ஒருவர் 
           விரும்பும் வண்ணம் , கெடுதலற்ற வினைகளுக்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
           தீவிரவாதம் விதைக்கும் வெறிகளை, முழுமையாய் வேரறுத்துவிட்டால்; மக்கள் விரும்புவது 
           போல், அச்சமற்ற சமுதாயத்திற்கு வித்திடும்.

0368.  அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
           தவாஅது மேன்மேல் வரும்

           விழியப்பன் விளக்கம்: ஆசை இல்லாதோர்க்கு, துன்பம் இல்லாமல் ஆகும்; ஆசை 
           இருந்தால், கெடுதல்கள் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்.
(அது போல்...)
           பிடிவாதம் இல்லாதோர்க்கு, குழப்பம் இல்லாமல் ஆகும்; பிடிவாதம் இருப்பின், குழப்பங்கள் 
           தவறாமல் வறுத்திக் கொண்டிருக்கும்.

0369.  இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
           துன்பத்துள் துன்பங் கெடின்

           விழியப்பன் விளக்கம்: துன்பங்களில் கொடிய துன்பமான, ஆசை அழிந்திடின்; எந்த 
           இடையூறுமின்றி, இன்பம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
(அது போல்...)
           ஊழல்களில் அபாய ஊழலான, கல்வி-ஊழல் குறைந்திடின், எவ்வித தடையுமின்றி, தேசம் 
           முன்னேறிக் கொண்டேயிருக்கும்.

0370.  ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
           பேரா இயற்கை தரும்

           விழியப்பன் விளக்கம்: ஒருபோதும் நிறைவளிக்காத இயல்புடைய, ஆசையை நீக்கிடின்; 
           அந்நிலைப்பாடே, மாறாத இயல்புடன் இருக்கும் வாழ்வை அளிக்கும்.
(அது போல்...)
           எவருக்கும் பயனளிக்காத குணமான, புரளியை நிறுத்திடின்; அம்முடிவே, குறையாத 
           மகிழ்வுடன் இருக்கும் குணத்தை அளிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக