வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

அதிகாரம் 039: இறைமாட்சி (விழியப்பன் விளக்கவுரை)

{இணையத்தில் கிடைத்த புகைப்படத்தில், குறிப்பைச் சேர்த்திட்டேன்}

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி

0381.  படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
           உடையான் அரசருள் ஏறு

           விழியப்பன் விளக்கம்: இணையற்ற “படைபலம்/குடிமக்கள்/உணவு/அமைசர்கள்/நட்பு/

           கோட்டை” எனும் ஆறுமடைய அரசன், அரசர்களில் சிங்கம் போன்றவன்.
(அது போல்...)
           ஒப்பற்ற “அரசாங்கம்/இராணுவம்/அறவொழுக்கம்/தேசப்பற்று/சுயசிந்தனை/நல்லிணக்கம்” 
           எனும் ஆறுமுடைய நாடு, உலக நாடுகளில் வல்லரசாகும்.
        
0382.  அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
           எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

           விழியப்பன் விளக்கம்: வீரம்/இரக்கம்/பகுத்தறிவு/வைராக்கியம் - இவை நான்கும்; எந்த 

           சூழலிலும் குறையாமல் இருப்பதே, அரசருக்கு இயல்பாகும்.
(அது போல்...)
           மண்வளம்/நீர்வளம்/தரமான-விதை/தழைச்சத்து - இவை நான்கும்; எந்த வகையிலும் 
           சிதையாமல் காப்பதே, விவசாயத்தின் அடிப்படையாகும்.
           
0383.  தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
           நீங்கா நிலனாள் பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: விழிப்புணர்வு/கல்வியறிவு/செயல்துணிவு - இவை மூன்றும்; நிலத்தை 

           ஆள்பவரை, எந்நிலையிலும் நீங்காமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
           பெற்றோர்/குடும்பத்தார்/உடன்பிறந்தோர் - இவர் மூவரும்; குடும்பத் தலைவரை, எப்போதும் 
           கைவிடாமல் இருக்கவேண்டும்.

0384.  அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
           மானம் உடைய தரசு

           விழியப்பன் விளக்கம்: அறவினைகள் தவறாமை/அறமற்றவற்றைத் தவிர்த்தல்/வீரத்தை  

           இழக்காமை - இவ்வித சுய கெளரவங்களை உடையதே, உண்மையான அரசாங்கமாகும்.
(அது போல்...)
           விமர்சிப்பவரை விமர்சிக்காதது/குறைகளைக் களைவது/சுயத்தை இழக்காதது - போன்ற 
           நல்ல ஒழுக்கங்களை உடையதே, உயர்வான மனிதமாகும்.

0385.  இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
           வகுத்தலும் வல்ல தரசு

           விழியப்பன் விளக்கம்: நிதி வளங்களை - உருவாக்குதல்/உயர்த்துதல்/பாதுகாத்தல்; 

           காத்தவற்றை முறையாய் பகிர்தல் - இவைகளில் வல்லமையுடையதே அரசாகும்.
(அது போல்...)
           சமூக அவலங்களை - கவனித்தல்/உள்வாங்குதல்/பிரதிபலித்தல்; பிரதிபலித்தவற்றைச் 
           சரியாய் கடைப்பிடித்தல் - இவற்றில் சிறந்தவரே படைப்பாளியாவர்.

0386.  காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
           மீக்கூறும் மன்னன் நிலம்

           விழியப்பன் விளக்கம்: அரசாள்பவர் - பார்ப்பதற்கு எளிமையாய், பிறர்மனம் புண்பட 

           பேசாதவனாய் இருப்பின்; அவர்கள் ஆளும் நாடு, உயர்வாய் புகழப்படும்.
(அது போல்...)
           படைப்பாளி - பழகுவதற்கு எளிதாய், விமர்சிப்போரை விமர்சிக்காத நேர்மையுடன் 
           இருப்பின்; அவர்கள் படைக்கும் படைப்புகள், அறமுடன் பயணப்படும்.

0387.  இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
           தான்கண் டனைத்திவ் வுலகு

           விழியப்பன் விளக்கம்: கனிவான பேச்சுடன், வேண்டியதைக் கொடுக்கும் திறனுடைய 

           ஆட்சியாளருக்கு;  அவர்கள் புகழ்காத்து, அவர்கள் விரும்பிய வண்ணம் - இவ்வுலகம் 
           அமையும்.
(அது போல்...)
           பொதுநல நோக்குடன், ஊழலை ஒழிக்கும் திண்ணமுடைய தலைவருக்கு; அவர்கள் 
           வெற்றிபெற, அவர்களுக்கு துணையாய் இருந்து - மக்கள் உதவுவர்.

0388.  முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
           இறையென்று வைக்கப் படும்

           விழியப்பன் விளக்கம்: அறச்செயல்களை வகுத்து, மக்களைப் பாதுகாக்கும் அரசாள்வோர்; 

           மக்கள் மனதில், இறைவனுக்கு நிகராய் உணரப்படுவர்.
(அது போல்...)
           சூழல்களை உணர்ந்து, குடும்பத்தை வாழ்விக்கும் பிள்ளை; உடன்பிறந்தோர் மனதில், 
           பெற்றோருக்கு நிகராய் மதிக்கப்படுவர்.


0389.  செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
           கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

           விழியப்பன் விளக்கம்: செவிமடுக்க முடியாத விமர்சன சொற்களையும், பொறுத்தருளும் 

           பண்புடைய; அரசனின் அருட்குடையின் நிழலில், உலகம் அமைதியாய் தங்கும.
(அது போல்...)
           அறமற்ற வகையில் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளையும், அரவணைக்கும் குணமுடைய; 
           ஆள்பவரின் உன்னதமான சேவையில், மக்கள் பயமின்றி வாழ்வர்.

0390.  கொடைஅளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
           உடையானாம் வேந்தர்க் கொளி

           விழியப்பன் விளக்கம்: வேண்டியவருக்கு கொடுத்தல்/கனிவுடன் பேசுதல்/அறம் 

           கடைப்பிடித்தல்/மக்களைப் பாதுகாத்தல் - இந்நான்கு நல்லொழுக்கம் உடைய அரசனே
           மற்ற மன்னர்களுக்கு கலங்ககரை விளக்காவான்.
(அது போல்...)
          முறையாய் பகிர்தல்/எதிர்பார்ப்பற்ற தியாகம்/முதியோரை மதித்தல்/உறவுகளைப் பேணுதல் - 
          இந்நான்கு அறங்களை உடைய உறுப்பினரேமற்ற உறுப்பினர்களுக்கு குடும்பத் 
          தலைவராவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக