சனி, ஆகஸ்ட் 27, 2016

என்னில் "தூரெ"டுத்தவன்...

{என்னைவிட, 3 அகவை குறைவெனினும்; "பிறவிப் பெரும்பயன் கண்ட வகையில்" 
நீ சாகாவரம் பெற்று - பல அகவைகள் "மூத்து" வாழ்வாய்!} 

             நம்மையும் அறியாமல்,  சிலர் மரணம் நம்மை மிகவும் பாதிக்கும். 14 ஆகஸ்த்து, 2016 அன்று நிகழ்ந்த - முனைவர். திரு. நா. முத்துக்குமாரின் மரணம் என்னை மிகவும் பாதித்தது! ஏன் என்னைப் பாதித்தது என்பதாய் சரியாய் விளக்க முடியவில்லை; அதை ஆராயவும் முனையவில்லை. என் முகநூல் நண்பர் திரு. சுடர் பாலா முதன்முதலில் "ஆனந்த யாழை" என்ற பாடலைப் பற்றி குறிப்பிட்டு; அதை என் மகளோடு நான் கொண்டிருக்கும் உறவைத் தொடர்பு படுத்தியதால் இருக்கலாம்! திரு. கமல்ஹாசனின் அபிமானியான எனக்கு, அவரே முத்துக்குமாரைப் பற்றி அடிக்கடி பாராட்டக் கேட்டதால் இருக்கலாம்! அல்லது என்மகளும் இரசிக்கும் "ஆனந்த யாழை" பாடலை 500-க்கும் கூடுதலான முறை (கேட்ட/பார்த்த)தால் இருக்கலாம் - எதுவாயினும், அம்மரணம் என்னைப் வெகுவாய் பாதித்தது! அப்பாதிப்பு இன்னமும் நீங்கவில்லை. இறந்த ஒரு வாரத்தில் தந்தி தொலைக்காட்சியில் வெளியான "ஆனந்த யாழை மீட்டியவன்" என்ற...

    நிகழ்ச்சி துவங்கி (மேலுள்ள புகைப்படங்களைப் பார்க்கவும்); இன்று காலை இந்த தலையங்கத்தின் முதல் வடிவத்தை எழுதும் போது(ம்) அதே தொலைக்காட்சியில் வெளியான "கவிஞர் நா. முத்துக்குமார் நினைவலைகள்" நிகழ்ச்சி வரை; ஏதேனும் ஒரு வடிவில் அவரைப் பற்றிய நினைவுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. கிட்டத்திட்ட 3 ஆண்டுகளுக்கு முன்; 8 செப்டம்பர், 2013 அன்று "நா. முத்துக்குமார் அவர்களுக்கு..." என்று நானெழுதிய மனதங்கம் (இணைப்பு: http://vizhiyappan.blogspot.ae/2013/09/blog-post_5021.html) பலருக்கும் தெரிந்திருக்கும். அதில் ஒரு சந்தேகத்தைக் கேட்டு, 2 பரிந்துரைகளையும் சொல்லி இருந்தேன்.  அதை அவர் படித்திருக்க "மிக மிக குறைவான வாய்ப்பே" உண்டு; ஏனெனில், அவர் போன்ற ஒரு படைப்பாளி - என்னைப்போன்ற ஒரு "சிறு படைப்பாளியின்" படைப்பை காண்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை, நானும் பிரபலமாய் இருந்திருப்பின், என் மனத்தங்கம் அவரை...

             எளிதில் எட்டியிருக்கும். அல்லது அதைக் கவனித்து(ம்) "ஒரு சிறு புன்னைகையோடு" அவர் கடந்திருக்கக்கூடும். அப்பதிவு அவரின் படைப்பில் குறை காணும் முயற்சி அல்ல; அவரின் படைப்பு என்னுள் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவு! அவ்விளைவையும் "மகள்-தந்தை உறவு..." என்ற தலைப்பில், அது சார்ந்த என் பதிவுகளை சான்றுகளிட்டு - ஒரு தலையங்கமாய் எழுதி இருந்தேன் (இணைப்பு: http://vizhiyappan.blogspot.ae/2013/09/blog-post_4541.html). அதன்பின் கூட, அவர் மீதான கவனம் கூடவில்லை; ஆனால், கமல் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருப்பார். நான் மட்டுமல்ல; எழுத்து/இலக்கிய உலகம் கூட - அவரிருந்தபோது, அவரைக் கவனித்து/கொண்டாட தவறிவிட்டது - என்பதே மேற்குறிப்பிட்ட இன்று காலை நான் பார்த்திட்ட நிகழ்ச்சியில் - பலரின் ஆதங்கமாகவே இருந்தது. என்ன செய்வது? இவர் போன்ற படைப்பாளிகள் - உரிய காலத்தில் கொண்டாடப் படுவதில்லை! ஏன்? பாரதியைக் கூட அவரிருக்கும்போதே...

     அதிகம் கவனித்து/கொண்டாடப் படவில்லை. இவர்கள் அளவுக்கு இல்லையெனினும் - எனக்குரிய அங்கீகாரம் நான் இருக்கும்போதே கிடைக்கவேண்டும் என்ற ஆசை அவ்வப்போது எழுவதுண்டு. நான் இறந்தபின்னாவது கிடைப்பின்; அது(வே) என் பிறப்பிற்கு சான்றாகும். இருக்கும் போது - அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது உண்மையாயினும்; இனிமேல்  அவருக்குரிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மிகுந்திருக்கிறது. அதற்கு - அவர் என்னுள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கமே சான்று! அந்தப் பாதிப்பை, முறையாய் பிறருக்கு கடத்துவதே இந்த பதிவின் நோக்கம். அவர் இறந்து சரியாய் ஒரு வாரம் கழித்து, 21 ஆகஸ்த்து, 2016 அன்று - மேற்குறிப்பிட்ட "ஆனந்த யாழை மீட்டியவன்" என்ற நிகழ்ச்சியில்; ஒருவர் வாசித்துக் காட்டிய, கணையாழியில் வெளியான முத்துக்குமாரின் "தூர்" என்ற கவிதை (இணைப்பு: https://anbasivamgeevee.blogspot.ae/2012/01/blog-post_07.html) - என்னைத் தூக்கிவாரிப்...

            போட்டது. அதுவரை, அக்கவிதையைப் படித்ததில்லை. அன்றும் - சொல்லக் கேட்டது தான்; ஆனால், கேட்ட மாத்திரத்தில் என்னுள் பேர்விளைவை உண்டாக்கியது. என்னுள், நானே புதைத்த பலவற்றை "தூர்" வாரி போட்டது; நிறுத்தப் பட்டிருந்த கவிதை எழுதும் செயல் தொடர, தினம் ஒரு கவிதையாய் பதிகிறேன். ஏற்கனவே எழுதியதை "சீர்படுத்தி" பதியவேண்டும் என்ற உறுதியும் கொண்டேன். அன்றிலிருந்து நான் எழுதும் கவிதைகள் - எனக்கே அதிகம் பிடிக்கின்றன. அற்ப ஆசைகளில் மூழ்கி, என்னுள் நானே புதைத்திட்ட திறம் வெளியே "தூர்"ஆய் வாரிப் போடப்பட்டது. என்னைப் போன்று பலருள்; முத்துக்குமாரின் படைப்புகள் "தூர்" வாரும் என்பது உறுதி. என்னுடைய அனுபத்தை "இறந்தும் தூரெடுப்பவன் (நா. முத்துக்குமார்)" என்ற தலைப்பில் ஒரு கவிதையாயும் பதிந்தேன் (இணைப்பு:http://vizhiyappan.blogspot.ae/2016/08/blog-post_86.html). அதிலிருந்து, சில வரிகள் கீழே:

                                                         உன்னுயிர் மறைந்தாலும்;
                                                         உன்னுருவு மறையாமல்;
                                                         என்னவர் போன்றோரால்
                                                         எஞ்ஞான்றும் காக்கப்படுவாய்!

ஆம், முத்துக்குமார்! உனக்கு மரணமில்லை; பலருள்ளும் நீ வாழ்வாய்!!

பின்குறிப்பு: அவரின் மரணம் குறித்து, சிலர் கேலியாகவும் - அறிவுரை சொல்வது போலவும் "அற்ப ஆசையில்" பேசி மகிழ்கிறார்கள். திரு. கலாபவன் மணி இருந்தபோதும் - இம்மாதிரியான விமர்சங்கள் எழுந்ததை - தவறென்று சுட்டிக்காட்டி பதிந்திருக்கிறேன். அருள்கூர்ந்து, இவற்றைத் தவிர்த்திடுங்கள் அன்பு உள்ளங்களே! "ஆனந்த யாழை மீட்டியவன்" என்ற நிகழ்வில் ஒருவர் வைத்த வேண்டுகோளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்: "அவரின் சுடலை வெளிச்சத்தில், உங்கள் முகத்தை வெளிச்சாமாக்கிக் கொள்ள வேண்டாம்!" என்பதே அது! - என்னவொரு ஆத்மார்த்தமான வரி? முத்துக்குமாரை மட்டுமல்ல! இறந்த வேறெவரையும்(கூட) விமர்சிக்கும் முன், இந்த வேண்டுகோளை நினைவில் கொள்ளுங்கள் அன்புள்ளங்களே!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக