ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

அதிகாரம் 042: கேள்வி (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி

0411.  செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
           செல்வத்துள் எல்லாம் தலை

           விழியப்பன் விளக்கம்: 
கேட்பதால் விளையும் அறிவுச் செல்வமானது, பல்வகைச் 

           செல்வங்களில் ஒன்றாகும்; அச்செல்வம், செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
(அது போல்...)
           பிறப்பால் கிடைக்கும் பெற்றோர் உறவானது, பல்வகை உறவுகளில் ஒன்றாகும்; அவ்வுறவு, 
           உறவுகள் அனைத்திலும் சிறந்ததாகும்.
        
0412.  செவிக்குண வில்லாத போழ்து சிறிது
           வயிற்றுக்கும் ஈயப் படும்

           விழியப்பன் விளக்கம்: 
செவிக்கு உணவான "கேட்டல்" கிடைக்காத நேரத்தில்; 

           கேள்வியைத் தொடர்ந்திட, வயிற்றுக்கும் சிறிய அளவில் உணவளிக்க வேண்டும்.
(அது போல்...)
           மனதை மகிழ்விக்கும் "சிந்தனை" இல்லாத சமயத்தில்; சிந்தனையைப் பெருக்கிட, 
           உடலுக்கும் போதிய அளவில் மகிழ்வளிக்க வேண்டும்.
           
0413.  செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
           ஆன்றாரோ டொப்பர் நிலத்து

           விழியப்பன் விளக்கம்: இப்புவியுலகில், செவிக்கு உணவான கேள்வியறிவைக் 
           கொண்டிருப்போர்; வேள்வியில் வார்க்கும் நெய் போன்றவற்றை உணவாக கொள்ளும், 
           தேவர்களுக்கு இணையானவர் ஆவர்.
(அது போல்...)
           இச்சமூகத்தில், பேரின்பம் அளிக்கும் பொதுநலனைப் பேணுவோர்; உடம்பில் இருக்கும் 
           உயிரணு போன்றவற்றை அங்கமாக அளிக்கும், இயற்கைக்கு ஒப்பானவர் ஆவர்.

0414.  கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
           ஒற்கத்தின் ஊற்றாந் துணை

           விழியப்பன் விளக்கம்: 
கற்காதவர் ஆயினும், கேள்வியறிவை வளர்த்தல் வேண்டும்; ஒருவர் 
           தளர்வடையும் நேரத்தில, அது “ஊன்றுகோல்" போல் துணையாய் இருக்கும்.
(அது போல்...)
           பொதுப்பணி செய்யாவிடினும், பணியாற்றுவோரை ஆதரித்தல் வேன்டும்; ஒருவரின் மரணப் 
           படுக்கையில், அது  “உயிர்சக்தி" போல் மனத்திடம் அளிக்கும்.

0415.  இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
           ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

           விழியப்பன் விளக்கம்: 
ஒழுக்கமுடைய சான்றோரின், பேச்சு மூலம் பெறப்படும் 
           கேள்விஞானம்; வழுக்கும் தன்மையுடைய இடத்தில், உறுதியாய் நிற்க உதவும் 
           ஊன்றுகோல் போன்றதாகும்.
(அது போல்...)
           அருளுடைய குருவின், வழிகாட்டல் மூலம் கற்கும் மெய்ஞானம்; அதீதமான ஆழமுள்ள 
           கடலில், மூழ்காமல் கரையேற உதவும் மிதவை போன்றதாகும்.

0416.  எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
           ஆன்ற பெருமை தரும்

           விழியப்பன் விளக்கம்: 
இயன்ற அளவில் நல்லவற்றைக் கேட்டு, பகுத்தறிவை வளர்க்க 
           வேண்டும்; அப்படி நாம் வளர்க்கும் அளவிற்கு, நிலைத்த பெருமை கிடைக்கும்.
(அது போல்...)
           முடிந்த வரை அறமுள்ளோரைத் தேர்ந்தெடுத்து, உறவுகளைத் தொடர வேண்டும்; அப்படி 
           நாம் தொடரும் அளவிற்கு, சிறந்த பிறவிப்பயன் விளையும்.

0417.  பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
           ஈண்டிய கேள்வி யவர்

           விழியப்பன் விளக்கம்: 
கேள்வியெனும் தேடலால், ஆழ்ந்தறிந்த அறிவைப் பெற்றவர்; 
           தவறான புரிதல் இருப்பினும், அறிவிலியான முறையில் பேசமாட்டார்கள்.
(அது போல்...)
           பொதுநலம் பேணுதலில், முழுமையாய் தம்மை ஆட்படுத்தியோர்; குறையுடைய 
           எதிர்கட்சிகளைக் கூட, சுயநலமான எண்ணத்தில் விமர்சிக்கமாட்டார்கள்.

0418.  கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
           தோட்கப் படாத செவி

           விழியப்பன் விளக்கம்: 
கேள்வியெனும் முதலீட்டால், கேள்விஞானத்தை வளர்க்கும் 
           திறனற்றோரின் செவிகள்; கேட்கும் திறனிருப்பினும், கேட்கவியலாச் செவிகளாகவே 
           உணரப்படும்.
(அது போல்...)
           சிந்தனையெனும் விவசாயத்தால், பகுத்தறிவை அருவடைக்கும் இயல்பற்றோரின் மூளை; 
           இயங்கும் நிலையிலிருப்பினும், மரணமடைந்த மூளைக்கு இணையாகும்.


0419.  நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
           வாயின ராதல் அரிது

           விழியப்பன் விளக்கம்: 
ஆழ்ந்தறியும் கேள்வி ஞானம் இல்லாதவர்; பிறர் வணங்கும் வண்ணம், 
           பண்பான சொற்களைப் பேசுபவராதால் அரிதானது.
(அது போல்...)
           வியத்தகு உறவுப் புரிதல் இல்லாதோர்; சமுதாயம் போற்றும் வகையில், உயர்வான 
           சந்ததிகளை உருவாக்குதல் கடினமானது.

0420.  செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
           அவியினும் வாழினும் என்

           விழியப்பன் விளக்கம்: 
செவிக்கு உணவான, கேள்வியறிவின் சுவை உணராமல்; வாயின் 
           சுவை மட்டும் உணர்ந்தோர், இறந்தாலும்/வாழ்ந்தாலும் என்ன பயன்?
(அது போல்...)
           உலகின் உயிரான, விவசாயத்தின் உன்னதம் புரியாமல்; பணத்தின் உன்னதம் மட்டும் 
           உணர்ந்தோர், உயர்ந்தாலும்/தாழ்ந்தாலும் என்ன வித்தியாசம்?
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக