ஞாயிறு, செப்டம்பர் 04, 2016

உணவும் - உலகாள்பவனும்


உண்ண உணவின்றி சிலர்
உண்ண வழியின்றி சிலர்
உணவை வீணடிக்கும் சிலர்
உணவை மருந்தாக்கி சிலர்

உணவை அளந்துபகிராத கடவுளால்
உலகை எப்படிஅளந்து ஆளமுடியும்?
இறைவனையே படைத்திட்ட மனிதனின்
குறைகளால் இறைநம்பிக்கை மிகுகிறது

மிகுந்த நம்பிக்கைமூட நம்பிக்கையாகி
மிருகமாய் சிலமனிதர்களை மாற்றிடவும்
சிலஇனத்தர் சிலநம்பிக்கை போட்டியில்
சிதைந்து; வாழ்ந்திடவோ வீழ்ந்திடவோ

வகையின்றி - "இருப்பதும் இறப்பதும்"
பகைகொண்ட மனிதனும் மனிதமுமே!
உண்ணமுடியா கடவுளுக்குப் படைப்பதை
உணவிலா உயிர்க்குப்பகிர்ந் தளிப்பதே

இறைதத்துவம் என்பதை உணர்வோம்!
இறைவனை தூரம்வைத்து மனிதனை
அருகில்வைப்போம்;  மனிதனும் இறைவனும்
இருவேறல்ல! மனிதனை மரிக்கவைத்து

இறைவனை உயிர்ப்பிப்பதில் பொருளில்லை!
இணையிலா இறைவனுக்கு உருவம்தந்து
மனிதனின் உருவழிப்பதை விட்டுவிட்டு
மனிதனைக் காப்போம்! இறைவனும்

சேர்ந்தே வளர்வான்! மனிதமில்லாத
ஊரொன்றில் இறைவனும் எப்படியிருப்பான்?
உலகை இறைவனே அளந்துகொள்ளட்டும்
உணவையாவது நாம்அளந்து பகிர்வோமே?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக