செவ்வாய், செப்டம்பர் 13, 2016

காமத்தைப் பற்றிப் பேசத் தயக்கமேன்???


         "காதலும், காமமும்" என்ற தலையங்கத்தைப் படித்திருப்பீர்கள். அது சார்ந்த கருத்துக்களை கவிதை, புதுக்கவிதை என்று பல வடிவங்களிலும் எழுதி இருக்கிறேன். இம்மாதிரியான விடயங்களை எழுதும் போது, அதைப் படித்த பலரும் அதுசார்ந்து விவாதிப்பதில்லை. குறிப்பாய் - ஆண்கள் அதிகம் தயங்குவதை உணரமுடிகிறது. என்னுடைய சில நண்பிகள் கூட அதுசார்ந்த பதிவுகளுக்கு கருத்திடுகின்றனர் - "கூட" என்ற சொல் பெண்களை தாழ்த்தி சொல்லும் நோக்கத்தில் இல்லை! ஆண்களை விட பெண்களைத்தான் இந்த சமூகம் மிகப்பெரிய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது; "அவர்களே பேசத் தயங்குவதில்லை" என்பதை வலியுறுத்த தான் "கூட" என்ற சொல்லக் கூட சேர்த்தேன். இந்த தயக்கத்தைப் பற்றி விரிவாய் எழுதவேண்டும் என்பதே இந்த தலையங்கத்தின் நோக்கம். தலையங்கத்திற்குள் செல்வதற்கு முன், ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காமத்தைப் பற்றி பேசுதல் என்பது வேறு!

        "காமத்தை விவரித்துப் பேசுதல் வேறு!!" இங்கே வேடிக்கையான விந்தை என்னவென்றால், ஆண்கள் அல்லது பெண்கள் தனித்திருக்கும்போது - ஒருவன் ஒருவளிடம் நடத்திய காமம் (அல்லது) ஒருவள் ஒருவனிடம் நடத்திய காமத்தை - விவரித்துப் பேசுவதில் கூட தயக்கம் இருப்பதில்லை. ஆனால், காமம் பற்றிய ஒரு புரிதலை உருவாக்கிட விவாதிக்க மட்டும் தயங்குகின்றனர் - அதிலும், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பேச முயற்சிப்பது கூட இல்லை. சமீபத்தில் "காமத்தில் ஏதுமில்லை" என்றோர் கவிதையைப் பதிந்திருந்தேன். அதன் இணைப்பை என் "வாட்ஸ்-ஆப்" குழுக்கள் சிலவற்றிலும் கொடுத்திருந்தேன்; ஆண்கள் மட்டுமே உலவும் அக்குழுக்களில் - பலரும் சிலாகித்து விவரித்து இருந்தனர். அதை முகநூலில் பதிந்தபோது - அவர்களும் அதை "லைக்கிட" கூட இல்லை. என்னுடைய ஆதங்கம், எதற்கும் உதவாத அந்த "லைக்" குறித்தானது இல்லை; மாறாய், அதே விடயத்தை தனிமையில்...

         சிலாகித்து பேசியோரில் ஒருவர் கூட "அருமை/நன்று" போன்ற ஒற்றை வார்த்தையை கூட சொல்லவில்லை என்பதே. பெண்களே தயங்காமல் பேசும்போது; ஆண்கள் ஏன் இப்படி தயங்குகின்றனர்? ஆனால் "காமம் பற்றிய புரிதலைப்" பேசுவதில் இருக்கும் தயக்கம் - மற்றவர் செய்யும் காமத்தை "நீலப்படம் அல்லது இன்னபிற காணொளிகளில்" பார்க்கும்போது ஏன் எழுவதில்லை? பார்ப்பதில்லாமல், பிறருக்கு பகிரவும் தயங்குவதில்லை. நானும் அப்படிப்பட்ட காணொளிகளைப் பார்த்திருக்கிறேன் என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், இப்படி "காசுக்காகப் பிறர் செய்யும் அசிங்கத்தைப்" பார்க்கும்போது எழாத தயக்கம் - காமம் பற்றிய புரிதலைப் பேசுவதில் எப்படி வருகிறது என்பதே என் வியப்பாய் இருக்கிறது. முகநூலில் சிலர் "அப்படிப்பட்ட காணொளிகளை விரும்பியதாய்" தகவல் வரும்; அதாவது, அப்படிப்பட்ட காணொளிகளைக் காண சில ஊடகங்கள் "விருப்பம்" தெரிவிக்க வற்புறுத்தும். 

     அதை தைரியமாய் "விருப்பக்"குறியிடும் சில தகவல்களைப் பார்த்திருக்கிறேன். அப்படி தகவல்கள் வரும்போது; அவர்கள் மேல் எனக்கு மரியாதை வரும். அந்த தைரியம் பாராட்டுக்குரியது; ஆனால், இங்கே பலரும் - அப்படிப்பட்ட காணொளிகளைப் பார்ப்பதைக் கூட மறைவாய் செய்யவே விரும்புகிறார்கள். மதுவருந்தும் பலரும் கூட இப்படித்தான் - அவர்கள் மதுவருந்துவது ஊருக்கே தெரியும்; ஆனால், மதுக்கடைக்கு சென்று மதுக்குடுவை வாங்க மாட்டார்கள். ஏனென்று கேடடால் - அவர்கள் கெளரவம் பாதிக்கும் என்பார்கள்; அதைக் கேட்டெழும் சிரிப்பை விட, அவர்கள் மேல் பரிதாபமே அதிகமாய் எழும். இதை ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனையாகவே நான் பார்க்கிறேன். காமத்தைப் பார்க்கவோ (அல்லது) காமத்தை விவரிக்கவோ - இல்லாத தயக்கம், காமத்தைப் பற்றி புரிந்து கொள்ள எப்படி வருகிறது? "மன்மதன் அம்பு" திரைப்படத்தில் ஒரு பாடலில் கீழ்க்காணும் வரி வரும்:

        "காமக் கழிவுகள் கழுவும் வேளையில், கூட நின்றவன் உதவிடவேண்டும்!" - கமல் என்னும் ஞானி எழுதிய வரிகள்.  அதை ஒரு பெண் தனது ஏக்கமாய் சொல்வதாய் எழுதி இருப்பார். இது வெறும் எதிர்பார்ப்பல்ல! அது ஆண்களைப்  பார்த்து "ஏன் டா கூட சேர்ந்து செய்யமட்டும் முடியும்! அந்தக் கழிவை கழுவ உதவ முடியாதாடா?!" என்று கேட்பதாகவே நான் பார்க்கிறேன். அதுபோல், நானும் செய்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு எந்த மறுப்பும் இல்லை. ஆனால், கமல் அப்படி செய்திருப்பார் என்று உறுதியாய் நம்புகிறேன்; அது வெறுமனே கற்பனையில் விளைந்த வார்த்தைகள் அல்ல! அது, அனுபவத்தில் தான் வந்திருக்கும். இப்படி அந்த பாடல் முழுக்க காமத்தைப் பற்றிய அருமையான புரிதல்களைக் கொடுக்கும் வரிகள் இருக்கும். அந்த வரிகளின் அர்த்தம் பலருக்கும் "புரிந்திருக்காது என்ற கசப்பான உண்மை கூட" என்னைப் பெரிதும் பாதிக்கவில்லை! ஆனால், அதையெல்லாம் சிறிதும் யோசிக்காமல் விலக்கிவிட்டு... 

       "உறங்கிக் கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாயகன் ஆள், எப்படி?" என்ற வரியை வைத்து "ஆன்மீக அரசியல்" செய்த சில அசிங்கங்கள் தான் என்னை அதிகம் பாதித்தது! அந்தப் பாடலின் துவக்கத்திலேயே "இது, ஒரு பெண் கடவுளிடம் முறையிடும் தோத்திரப் பாடல்!" என்று தெளிவாய் சொல்லி இருப்பார். காமத்தை வெறுமனே "பார்வையாய்/விவரிப்பாய்" பார்க்கும்/பேசும் சாதாரணர்களுக்கு இது புரிய வாய்ப்பேயில்லை.  இது ஒரு பெண்ணின் குமுறல்/ஆதங்கம் - என்பதே அந்த வரி. "திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை!" என்ற சொல்லாடல் போல் - அப்படிப்பட்ட பெண்கள் வேறென்ன செய்யமுடியும்? இங்கே, ஆண்கள் தங்கள் புரிதலை விவாதிக்கவே இத்தனை சிக்கல்கள்; அப்படியிருக்க ஒரு பெண்ணின் உணர்வு எப்படி புரியும்? அமைதியாய்  கேட்டு விலகிவிட்டு - ஆண்கள் வட்டத்தில் - அவளை "வேசி" என்று பழிச்சொல்லும். இம்மாதிரியான சூழலில், ஒரு பெண் தன் ஏக்கத்தை வேறெவரிடம் சொல்வாள்?

         அதனால் தான் "அரங்கநாயகனைப் பார்த்து" அப்படிக் கேட்கிறாள். காமச் செயல்களுக்கு மட்டும் தன்னை உபயோகிக்கும் ஆண்களிடம்; ஒரு பெண்ணால் காமம் சார்ந்த புரிதலைப் பற்றி எப்படிப் பேசமுடியும்? இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் - கமலை விமர்சிப்பது அவர்களின் மனக்குறைப்பாட்டையே காண்பிக்கிறது. கமல் போன்றோர் சொல்வதையே புரிந்து கொள்ளாதபோது - நான் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் - என்னிடம் விவாதிக்க மறுப்பதில் எனக்குப் பெருத்தக்  கவலையில்லை. ஆனால், காமத்தைப் பார்க்க/விவரிக்கும் போது வராத தயக்கம் - அது சார்ந்த புரிதலைப் பற்றி பேசும்போது எழுவது மிகப்பெரிய ஆபத்து! இது ஓர் மனக்குறைபாடு; இந்தக் குறைபாடின் வீரியம் அதிகமாகும்போது தான் "காமம் சார்ந்த குற்றங்கள்" நடக்கின்றன என்று நான் திடமாய் நம்புகிறேன்.  காமம் சார்ந்த புரிதல் மிகவும் முக்கியம்; குறிப்பாய், இன்றைய தலைமுறைகளுக்கு காமம் சார்ந்த காணொளிகள்...

      மிக எளிதாய் கிடைக்கின்றன; எனவே, அவர்கள் எளிதில் தடம் புரள்வர். அப்படிப்பட்ட இளைஞர்/இளைஞிகள்  தடுமாறாமல் இருக்க - முதலில் நமக்கு அந்தப் புரிதல் இருக்கவேண்டும். அதற்கு, நாம் காமம் சார்ந்த விவாதத்தை எந்த தயக்கமும் இல்லாமல் செய்யவேண்டும். காமத்தை நாம் புரிந்துகொண்டால் தான் - பெற்றோராய்/வயதில் மூத்தோராய் - அடுத்த தலைமுறைக்கு விளக்கமுடியும். இல்லையேல் சென்ற தலைமுறை போல் "அதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது!" என்று வெறுமனே அதட்டத்தான் போகிறோம். அது அவர்களை மிகத்தவறான பாதையில் தான் இட்டுச்செல்லும். காதல் இல்லாத "காமத்தில் ஏதுமில்லை!" என்பதை அவர்களுக்கு புரியவைக்க, அந்தப் புரிதலை முதலில் நமக்குள் உருவாக்கவேண்டும். இல்லையேல் - நம் பிள்ளைகள்/நட்புகள்/மற்றவர்கள் - இப்படி எவருக்கும் காமம் சார்ந்தப் புரிதலை உருவாக்க முடியாது. இதற்கும் எந்த விவாதமும் எழாமல் போகலாம்; ஆனால், காமத்தைப் பற்றிய என் புரிதலை அதிகரிக்க...

காமத்தைப் பற்றிப் பேச; எனக்கு எந்த தயக்கமும் இல்லை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக