வியாழன், செப்டம்பர் 15, 2016

திருமணமானப் பெண்களின் "பெயர் மாற்றம்"...


        ஒரு வாரத்திற்கு முன், என்மகள் "அப்பா! என்பேருக்குப் பின்னால, உங்க பேரு இருக்கு? அம்மா பேருக்குப் பின்னாடி மட்டும் ஏன் சின்ன-தாத்தா பேரு இருக்கு?" என்று வினவினாள். கேட்பதற்கு சாதாரணமான கேள்வியாய் தோன்றினாலும், பல விடயங்கள் அதில் மறைந்து இருக்கின்றன; நிச்சயம் என்மகள் அவற்றை உணர்ந்து கேட்கவில்லை! அவளைப் பொறுத்த அளவில், அவள் பெயரைப் போல் - என்னவளின் பெயரிலும். என் பெயர் இருப்பதே சரி என்று நம்புகிறாள். அவளிடம் "உன் பெயர் என்ன?" என்று வினவினேன்; அவள் "விழியமுதினி" என்றாள். சரிடா... "உன் முழுப் பெயர் என்ன?" என்றவுடன் "விழியமுதினி வேனில் இளங்கோவன்" என்றாள். "உன் பெயருக்குப் பின்னால், உன் அப்பாவான என் பெயர் இருப்பது போல்; அம்மாவின் பெயருக்குப் பின்னால், அவளின் அப்பாவான சின்ன-தாத்தா பெயர் இருக்கிறது" என்று விளக்கினேன். அவளுக்குத் தேவையான பதில் கிடைத்துவிட்டதாய் ஆமோதித்து நகர்ந்துவிட்டாள்.

          ஆனால், அவளுக்கு முழுமையான பதிலை சொல்லிவிட்டதாய் நான் எண்ணவில்லை; அந்த கேள்வியைச் சார்ந்த "என் மனதில் ஆழ்ந்திருந்த" சில விடயங்களை பகிரவே இந்த தலையங்கம். என்றேனும் ஓர் நாள் அவள் இதைப் படிக்கக்கூடும்; இல்லையெனினும், அவளுக்குத் தேவையான நேரத்தில் நான் விளக்குவேன். நல்லவேளை! என் மருதாயின் பெயரின் பின்னால் இருப்பதும்; அவரின் தந்தை பெயர் தான். என் மருதந்தையும், பலரும் செய்வது போல் - தத்தம் "மனைவியின் பெயருக்குப் பின்னால்" தன் பெயரை இணைக்கும் முறையற்ற செயலை செய்யவில்லை! இல்லையேல், என்மகள் அதை உதாரணமாய் எடுத்துக்கொண்டு மேற்கொண்டும் வினவி இருப்பாள். தொடர்ந்த சிந்தனையில், பலரும் - அவ்வாறு மனைவியின் பெயருக்குப் பின்னால், தன் பெயரை இணைக்கும் செயலும்; அதைச் சார்ந்த எண்ணங்களும் அடிமனதில் இவர்ந்து மேலெழ ஆரம்பித்தன. என்மகளின் பெயரில், என்னவளின் பெயரை"யும்" இணைத்த...

      நியாயமான செயலைப் போலவே; என்னவளின் பெயரில் இருக்கும், என் மருதந்தையின் பெயரை அழிப்பதிலும் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. நாளை ஏதேனும் குடும்ப நிகழ்ச்சிக்காய் அழைப்பிதழ் அச்சடிப்பினும், என்னவள் பெயர் "வேனில் பாண்டியன்" என்றே இருக்கும். அவள் பெயரில் இருக்கும் அவள் தந்தையின் பெயரை மாற்றும் உரிமை எனக்கில்லை என்பது என் புரிதல். ஒரு குழந்தை (ஆணோ/பெண்ணோ) பிறந்தவுடன் அதன் அடையாளத்திற்காகவே "பெயர்" இடப்படுகிறது. அதில் - மிகப்பெரும்பான்மையான பங்கு - அக்குழந்தையின் பெற்றோர்களுக்கே இருக்கிறது. அப்படி, பலவிதக் கற்பனைகளுடன் ஒரு பெற்றோர் இட்ட பெயருடன் - பெற்றோர் பெயர் இணைந்திருப்பதே சிறப்பு. அப்படியோர் எண்ணம், எனக்கு எப்போதும் எழுந்ததில்லை. இன்றைய காலக்கட்டத்தில் பலரும் - மனைவியர் பெயரில் இருக்கும் பெற்றோர் பெயரை மாற்றுவதில்லை எனினும்; இன்னும் பெரும்பான்மையில் பலரும்...

       அப்படிச் செய்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை. சென்ற தலைமுறையினர் இப்படிச் செய்ததற்கு பின்னணியில், ஆணாதிக்கம் போன்ற பல காரணங்கள் இருந்திருக்கும். மேலும், பெரும்பான்மையை சென்ற தலைமுறைப் பெண்கள் படிக்கவில்லை என்பதால் - அவர்களிடம் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இருந்திருக்காது; எனவே, பெயர் மாற்றம் பெரிய சிக்கலாய் இருந்திருக்காது. எனவே "தவறான காரணங்கள் கற்பிக்கப்பட்டு; அதுதான் நியதி"; என்று சொல்லப்பட்டு இருக்கும். ஆனால், இன்றைய தலைமுறைப் பெண்கள் பலரும் அதிகம் படித்து குறைந்தது ஒரு "பட்டமாவது" பெற்றிருக்கிறார்கள். அவர்களிடம் பல சான்றிதழ்கள் இருக்கும்; அதையும் கடந்து, அவற்றிலும் பெயரை மாற்றும் செயலையும் பலரும் செயகின்றனர். இதில் பலருக்கும், சில சான்றிதழ்களில் "தந்தையின் பெயர் இணைந்தும்"; சில சான்றிதழ்களில் "கணவன் பெயர் இணைந்தும்" - இருக்கும்; அதனால், பல தேவையற்ற...

           குழப்பங்களும் விளைகின்றன. அதுபோல், சிரமங்கள் அனுபவிக்கும் பெண்களைச் சந்தித்து இருக்கிறேன். விருமாண்டி திரைப்படத்தில், ரோஹிணி பேசும் கீழ்வரும் வசனம் வரும்: "என் பெயர் ஏஞ்சலா காத்தமுத்து. நான் சந்தோசமா இருக்கனும்னு எங்கப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சார் - நான் ஏஞ்சலா ஜேம்ஸ் ஆக மாறினேன்; அப்புறம், என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு, அவரை வெட்டிட்டு எங்கப்பா ஜெயிலுக்குப் போயிட்டார்; நான் மறுபடியும் ஏஞ்சலா காத்தமுத்து வாக மாறினேன்" - என்பதே அந்த வசனம். மேலோட்டமாய் கேட்போர்க்கு - இது வெறும் அறிமுக வசனமாய் தான் தோன்றும். அந்த வசனத்தைப் பேசி முடிக்கும்போது, ஒரு மெல்லிய பெருமூச்சுடன்; குரலில் தொய்வுடன் சொல்லி முடிப்பார் ரோஹிணி. ஆழ்ந்து கவனிப்போர்க்கு, அதில் ஆயிரமாயிரம் உணர்வுகள் வெளிப்படுவது தெளிவாய் தெரியும். அது வெறும் வசனம் அல்ல; பெயர் மாற்றத்தில், பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை...

        ஆழ்ந்து சொல்வதாகவே நான் உணர்ந்தேன். திருமணமான பெண்களின் பெயரில் மாற்றம் செய்வது - வெறுமனே பெயர் மாற்றம் மட்டுமல்ல! அது ஒருமகளின் உணர்வும்/உறவும் சார்ந்த விடயம்; அதுபோல், அது ஒரு தந்தையின் பாசம்/நேசம் சார்ந்த விடயமும் கூட. ஒரு கணவனாய், இந்த பெயர் மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் கடக்கக்கூடும். ஆனால், ஒரு தந்தையின் நிலையை எட்டி - தன் மகளின் பெயர் மாற்றப்படும்போது, இது நிச்சயம் புரியும். நாளை என்மகளின் பெயரும் அப்படி மாற்றப்படுமா?! என்பது தெரியவில்லை; அப்படி நடப்பினும், நான் எதையும் விவாதிக்காமலே தான் இருப்பேன். காரணம், இம்மாதிரியான உணர்வும்/உறவும் - கேட்டுப் பெறவேண்டியவை அல்ல! மாறாய், அவை இயல்பாய் உணரப்பட்டு; இயல்பாய் செய்யப்பட வேண்டிய விடயம். திருமணமான ஓர் பெண்ணின் பெயருக்குப் பின்னால் இருக்கும், ஓர் தந்தையின் பெயர் மாற்றப்படுவதில் எந்த நியாயமும் இல்லை. என்னளவில்...

திருமணமானாலும், ஓர் பெண் தன் தந்தையின் பெயரைத் தங்கியிருத்தலே நியாயம்!!!   

10 கருத்துகள்:

  1. அண்ணா வணக்கம்,

    தங்களுடைய பதிவை வாசித்தேன், மிகவும் நன்று. இதே கருத்தை இரண்டு வாரங்களுக்கு முன்னாள் என்னுடைய சக நண்பருடன் கலந்து ஆலோசித்துக்கொண்டிருந்தேன். இறுதியில் அது ஒரு விவாதமாகவே ஆகி போனது. இதே கருத்தை தான் நானும் கூறினேன். எனக்கும் என் பெயரை என் மனைவி பெயருடன் இணைப்பதில் விருப்பம் இல்லை. அதே நேரத்தில், எனக்கு ஒரு கேள்வி, அணைத்து குழந்தைகளுக்கும் (ஆன், பெண் ) அவர்களுடைய பெயருக்கு பின்னால் தந்தை பெயர் மட்டுமே சேர்க்கப்படுகிறது , ஏன் தாய் பெயர் சேர்க்கப்படவில்லை. இது சாத்தியமா? (சாத்தியமே இல்லை என்று என் நண்பர் வாதிட்டார்). தங்களுடைய பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். நன்றி .

    அன்புடன்
    செ. ராசா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராஜா; உன்னிடம் இருந்து ஓர் செய்தி வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

      1. வெகு நிச்சயமாய் சாத்தியம்ப்பா. அதை வலியுறுத்தும் விதமாய் தான் என்மகளின் முழுப்பெயர் "விழியமுதினி வேனில் இளங்கோவன்" என்பதைக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

      2. என்னைப்போல், பலரும் பிள்ளைகள் பெயருடன் - தாய் பெயரை இணைத்து பெயரிட்டிருப்பதை/இடுவதை அறிவேன்.

      3. அவளின் பெயர் பிறந்த காரணத்தைத் தான் இந்த வலைப்பூவின் முதல் தலையங்கத்தில் எழுதி இருந்தேன்; நீயும் படித்துப் பாராட்டினாய் - மறந்திருப்பாய் போலும்.

      வெகுநிச்சயமாய் சாத்தியம் ராஜா. வேறேதேனும் தகவல் வேண்டப்பட்டால் சொல்லப்பா.

      நன்றியப்பா.

      நீக்கு
    2. ஓர் குறிப்பு: "வேனில்" என்பது என்னவளின் பெயர். :)

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  4. அண்ணா,

    பள்ளியில் சேர்க்கும் பொழுது initial பிரச்சினை வருமே அண்ணா. நீங்கள் "V " என்று கொடுப்பீர்களா அல்லது "E " என்று கொடுப்பீர்களா? தெளிவுபடுத்தவும் அண்ணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. மீண்டும் நல்ல கேள்வி ராசா.

      இதைப் பற்றியும் விரிவாய் "பெயரை எப்படி வைத்தல்/ எழுதுதல் வேண்டும்?..." என்றோர் தலையங்கம் எழுதி இருக்கிறேன் {இணைப்பு: http://vizhiyappan.blogspot.ae/2012/03/blog-post_1859.html}. சுருக்கமாய் சில தகவல்கள், கீழே:

      1. முன்பிருந்த "பள்ளிக் கல்வி சட்டத்தின்" படி, குழந்தைகளின் பெயர் ஆங்கிலத்தில் எழுதும்போது 30 எழத்துகளுக்குள் இருக்கவேண்டும். இடைவெளி (Space)யும் ஓர் எழுத்தாய் கணக்கிடப்படும். இப்போது, அந்த விதியில் ஏதேனும் மாற்றம் வந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

      2. பள்ளி முதல் எல்லா இடங்களிலும் - முடிந்த அளவில் - என்மகளின் பெயரை "விழியமுதினி வேனில் இளங்கோவன்" என்று முழுதாய் எழுதவே வற்புறுத்தி, அவ்வாறே பழ(க்)கி வருகிறோம்.

      3. இருப்பினும், சில இடங்களில் முதலெழுத்து (Initial) மட்டும் தான் எழுதமுடியும் என்று நேரும்போது "விழியமுதினி வே.இ. (Vizhiyamudhini V.E.) என்றே பதிந்து வருகிறோம்.

      4. அவள் சம்பந்தமான எல்லா ஆவணங்களிலும் - மேற்குறிப்பிட்ட இருவகைகளில் தான் அவள் பெயர் பதியப்பட்டு இருக்கும். முடிந்த அளவில் - முழுப்பெயர். இதில் எந்த சிரமமும் இல்லை ராசா; நாம் தான் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்.

      மீண்டும் நன்றியப்பா.

      நீக்கு