புதன், செப்டம்பர் 14, 2016

அறத்தின் அடிப்படை - பயமா??? (பாகம்-2)


     "அறத்தின் அடிப்படை பயமா???" என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியிருந்தேன்.  வழக்கம் போல், பலதையும் ஆழ்ந்து விவாதிக்கும் என் நண்பன் கதிர் "தீய வினைகளை செய்யக்கூடாது என்ற உணர்வுதானேடா அறம்?!" என்ற விவாதத்தை வைத்தான். வெகுநிச்சயமாய் அவனின் கேள்வி சரி! அறமற்றவைகளை செய்யக்கூடாது என்ற உணர்வுதான்; அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற உறுதியை நிலைநாட்டும். ஆனால், அந்த தலையங்கத்தின் அடிப்படை "அற்ப ஆசைகளில்" நாம் செய்ய முனையும் சில செயல்கள். எல்லா அற்ப ஆசைகளும் அப்படித்தான்; அங்கே அறம் சார்ந்த உணர்வுகள் பின்னுக்கு செல்லும். அதுபோன்ற நேரங்களில் "மனசாட்சிக்கு பயப்படும் நம் இயல்பு மட்டுமே" அறம் தவறாமல் காக்கும் என்பதையே அதில் வலியுறுத்தி இருந்தேன். அதுபோல், சிலர் "கடவுளுக்கு பயப்படுவதும்; மனசாட்சிக்குப் பயப்படுவதும்; மற்றும் "செய்யும் வினை(கர்மா)களுக்கு பயப்படுவதும் தான்"...

        அறம் என்று சொல்வர். அதிலும், எந்த மறுப்பும் இல்லை; கடவுளும், கடவுள் சார்ந்த கர்மா போன்றவைகளும் - அறம் சார்ந்த பயத்தை உருவாக்க, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்பதால் - "அறத்தின் அடிப்படை பயமே!" என்பது உறுதியாகிறது. அறத்தின் அடிப்படையில், மனிதர்களை மூன்று விதமாய் பிரிக்க விரும்புகிறேன்:
  1. முதல் வகை: கடவுள் போன்ற காரணிகளால் அறத்தைக் கடைப்பிடிப்போர். இப்பிரிவினர், பயம் என்ற காரணியை பின்னுக்கு தள்ளி "எந்த நிலையிலும்" அறத்தை மீறக்கூடாது என்ற உறுதி கொண்டவர்கள். இவ்வகை மனிதர்கள் - இப்போது "மிக மிக" அரிது (ஏன், எவரும் இல்லை என்றே கூட சொல்லலாம்!).  இருப்பினும், அவர்களுக்கும் "கடவுள்/மனசாட்சி/கர்மவினை - இப்படி ஏதோ ஒன்றின் மீதான பயமே" - அறத்தின் அடிப்படை ஆகிறது. மேற்குறிப்பிட்ட தலையங்கம் அவர்களைச் சார்ந்தது அல்ல!
  2. இரண்டாவது வகை: அறம் என்ற ஒன்றைப் பற்றி எந்த சிந்தனையும்/புரிதலும்/பயமும் இல்லாதோர்! அவர்களுக்கு அறம் பற்றிய எந்த அக்கரையும் இருப்பதில்லை. இப்பிரிவில், அறம் பற்றிய சிந்தனையும்/அறிவும் இருந்தும் - தெரிந்தும்; மனசாட்சிக்கு தெரிந்தே - மீறுவோரும் அடக்கம். இந்தத் தலையங்கம் அவர்களைக் குறித்தானதும் அல்ல. "அறத்தின் அடிப்படையான பயம்" இல்லாதது தான் - இவர்கள் அறத்தை மீறக் காரணம்.
  3. மூன்றாவது வகை: இவ்வகையினர் அறம் பற்றிய சிந்தனையும்/புரிதலும்/அறிவும் இருப்போர் - அதனால், பல அறமீறல்களையும் தவிர்த்து வாழ்வர். இருப்பினும் - சூழல்/அற்ப-ஆசை போன்ற காரணிகளால் தவறுகளைச் செய்ய முற்படுவர். இந்த வகையினர் தான் - நம்மில் பெரும்பான்மையோர். சில குறிப்பிட்ட செயல்கள் - "அற மீறல்" என்பது தெளிவாய் தெரியும்; அவர்களின் புத்திக்கு மிகத்தெளிவாய் தெரியும். இருப்பினும், மனது அவர்களை வற்புறுத்தும். செய்யடா! பார்த்துக் கொள்ளலாம் என்று உந்தும். அவர்களை மையப்படுத்தியது தான் என் தலையங்கம்.
       இரண்டாம் வகையினர் தவிர்த்து, மற்றவர்களுக்கு அறம் மீறியவற்றைச் செய்ய முனையும் போது - அவர்களுக்குள் இனம் புரியாத பயம் வரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அது - கடவுள் தண்டிப்பார் (அல்லது) மனசாட்சி தண்டிக்கும் (அல்லது) கர்மவினைகள் தண்டிக்கும் (அல்லது) சட்டம் தண்டிக்கும் - போன்ற எந்த காரணியாலும் நிகழலாம். "எது காரணம்?!" என்பது முக்கியமில்லை. உண்மை என்னவெனில், எதுவொன்றையோ சார்ந்த "பயம் தான்" அவர்களைத் தடுக்கிறது என்பதே இங்கே முக்கியக் கரு. இந்த அடிப்படையில் தான், இவர்களை மையப்படுத்தி தான் - மேற்குறிப்பிட்ட தலையங்கத்தை எழுதினேன். "கடவுள் என்பதே கற்பிக்கப்பட்டது என்பதால்" - எனக்கும் கடவுள் பக்தி இருப்பினும் - நான் கடவுளை ஒரு உயர்சக்தி என்பதாய் மட்டுமே பார்க்கிறேன். அதைத் தாண்டி, கடவுள் தண்டிப்பார்! என்ற மாயையான-நம்பிக்கையில் எனக்கு நம்பிக்கையில்லை. என் கடவுள் சார்ந்த நம்பிக்கை வேறு!...

     கடவுள் தண்டிப்பார் என்ற நம்பிக்கை வேறு!! என்னளவில் முக்கியமான "அறம் சார்ந்த அடிப்படை பயம்" - 1. என் மனசாட்சி 2. ஒவ்வொரு வினைக்கும் - எதிர்வினை உண்டு என்ற கோட்பாடு (கர்மவினை) மற்றும் 3. சட்டம் - இந்த வரிசையிலேயே எழுகிறது. எது காரணமென்பதும்; எந்த காரணம் முதன்மையென்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் "அடிப்படை பயம் மட்டுமே!"; என் பயத்திற்கு காரணம் மனசாட்சி. "கடவுள் தண்டிப்பாரா?!" என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! சொர்க்கம்/நரகம் என்பவை எல்லாம் கற்பனையானவை என்பது என் புரிதல். அப்படியே, அது உண்மையெனினும் - அதுபற்றி நான் இப்போது பயப்படுவதில் எந்த நியாயம் இல்லை. சட்டம் தண்டிக்கும் என்பது - சட்டமாய் இருக்கிறது! பலருக்கும் பலவித தண்டனைகளைச் சட்டம் வழங்கினாலும் - சட்டம் கண்டிப்பாய் தண்டிக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. தொடர்வண்டி நிலையத்தில்... 

          ஒரு பெண்ணைக் கொன்றவன் யாரென்று இன்னும் நிரூபணம் ஆகவில்லை; அதைப் பலரும் இப்போது விவாதிப்பது கூட இல்லை. என்னால் இன்னும், அந்நிகழ்வை மறக்க முடியவில்லை! "அறம் சார்ந்த பயம்" இருந்திருப்பின், அக்கொலை நடந்திருக்காது என்று திடமாய் நம்புகிறேன். அக்கொலைக்கு காரணமானவர் - எங்கோ உயிரோடு உலவிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, சட்டத்தின் மேலும் பெருத்த பயமில்லை; என் பயமெல்லாம் "என் மனசாட்சி தான்!" தெய்வம் போலவோ (அல்லது) அரசு(அன்) போலவோ - நின்று கொல்லக் கூட மறப்பதில்லை; மனசாட்சி அன்றே/அப்போதே கொல்லும்! எனவே, மனசாட்சி விளைவிக்கும் பயத்தையே, அறத்தின் அடிப்படையாய் பார்க்கிறேன். நம்மை மதிப்பிடும் மிகச்சிறந்த கருவியாய் "மனசாட்சியை" தான். "நம்மைத் தவறென சிலரும்; சரியென சிலரும் விமர்சிக்கலாம்!" - உண்மை எதுவென்பது, நம் மனசாட்சிக்குத் தெளிவாய்/உண்மையாய் தெரியும். எனவே...

மனசாட்சி சார்ந்த பயமே - அறத்தின் அடிப்படையாய் நான் பார்க்கிறேன்!!!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக